Sunday, July 31, 2011

கழியலாட்டம்

கழியல் ஆட்டம் தமிழர் ஆடற்கலைகளுள் ஒன்றாகும். கம்பு கழி என்றும் சொல்லப்படுவது உண்டு. என்வே கழியை கையில் கொண்டு ஆடுவதால் கழியலாட்டம் என்று பெயர்பெறுகிறது. மேலும் களியலாட்டம், கழலடி, களல் எனப்பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மலையாளத்தில் கோல்களி, கோலடிக்களி, கோலடி, கம்புக்களி, வெட்டும்தட என அழைக்கிறார்கள். இக்கலை போர்க்கலை, தற்காப்புக்கலை போன்ற தன்மையுடையது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இக்கலை உள்ளது. உவரியில் வாழும் பரதவர் இன மக்கள் இக்கலையை ஆடுகின்றனர். அதற்குப் பரதவர் கழியல் என்று பெயர். கழியல் ஆட்டம் தொடக்க நிலை, தயார் நிலை, சாதாரண நிலை, வேக ஆட்ட நிலை, மின்னல் வேக ஆட்ட நிலை, இறுதி ஆட்ட நிலை என ஆட்ட வகைகள் உண்டு. எட்டு, பத்து, பனிரெண்டு, பதினாறு என இரட்டைப்பட எண்ணிக்கையிலேயே ஆடுவர். ஏனெனில் இரண்டு இரண்டு பேர் ஒருவருக்கொருவர் எதிரெதிர் நிலையில் பார்த்துக்கொண்டு வட்டவடிவத்தில் நின்று ஆடுவர். பாடல்கள், இசைக்கருவிகளின் பின்னணி ஆகியவற்றிற்கு தக்கவாறு ஆடுவர். முதன்மையான இசையாக கழியல் கம்புகளிலிருந்து எழும் ஓசையே அமையும்.

No comments:

Post a Comment